Wednesday, December 8, 2010

Padithathil Pidththathu... this is a comment by Aravindhan in Dinamalar for Kamal Hassans poetry

ஆண்டாள்: ஆபாச இலக்கிய முன்னோடி?: அண்மைக்காலமாக தங்களை அறிவுஜீவிகள் எனக் கருதிக்கொள்பவர்கள் அதனை நிரூபிக்க எடுத்துக்கொண்டுள்ள குறுக்குவழிகளில் ஒன்று - ஆண்டாளின் பாசுரங்களில் உள்ள பக்தியையும் அழகையையும் ஆன்மிகத்தன்மையையும் முழுமையாக நீக்கி விட்டு அவற்றை உடலிலயக்கியம் என்றும் பெண்ணிய எதிர்ப்பு இலக்கியம் என்றும் குறுக்கி பேசுவது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆண்டாளின் இலக்கியம் ஆபாச எழுத்தா அது வெறும் உடலிச்சையை காட்டும் இலக்கியமா என்பதை சிறிது காணலாம். முதலில் ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு. முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது அவ்வுணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உணர்வாக உயர்த்துவது. நாயகி-நாயக பாவத்துடன் இறைமையை அணுகுவது இது. காம-வேட்கையும் புணர்தலும், அதன் மூலம் சிருஷ்டியும் - இவை அனைத்திலும் ஊடாடும் உணர்ச்சியும், ஆனந்தமும், தன்னிழத்தலும், சோகமும் என அனைத்துமே - இருத்தலின் ஆதார இயக்கதில், அதன் தொடக்கத்தில், அதன் ஜீவத்துடிப்பில், அதன் இறுதிக்கரைதலில் இருப்பதைத் தம் அகவிரிதலில் கண்டுணர்ந்த வேத ரிஷிகள், வேத மந்திரங்களில் இதனைப் பாடுபொருளாகக் கொண்டனர். இங்கு ”இருத்தல்” என்பது வெறும் மானுட இருத்தல் அல்ல; அதன் ஆக விரிவான, ஆக முழுமையான பொருளிலான இருத்தல். காதலிகளின் காதலனாக இறைவனைக் கூறும் முதல் உலக இலக்கியமாக ரிக் வேதத்தைச் சொல்ல முடியும். ஆதிப் பழங்குடிகளின் ஞான மரபுகளிலிருந்தும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் தேடல்களிலும் கண்டடைவுகளிலிருந்தும் எழுந்த ஞானக்கருவூலமே ரிக் வேதம். எனவே இந்த நாயகி-நாயக பாவத்துடன் இறைத்தன்மையை அணுகுவதென்பது எப்போது தோன்றியதென்பது ஊகங்களுக்கே உரியது. ஆனால் பின்னாட்களில் நாம் காணும் பல தீவிர காதல் உணர்ச்சிகளை நாம் வேத இலக்கியத்தில் காணமுடிகிறது: ”காதல் மிகுந்த மனைவி அவளது கணவனைத் தொடுவது போல இறைவனது இதயத்தை என் பாடல் தொடட்டும்” - ரிக்: 10.91.13. “மணமகன் மணமகளிடம் சுகம் பெறுவது போல எனது பாடலால் இறைவன் சுகம் அடையட்டும்.” - ரிக் 3.62.8. ”மந்திரங்கள் மனைவி கணவனது மேனியை தீண்டுவது போல இறைவனை தீண்டுகின்றன, அவனது மேனியை சுகமாக அழுத்தி விடுகின்றன” - ரிக். 3.41.5. (இங்கு தீண்டுதல் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் பதத்துக்கு முத்தம் எனும் மற்றொரு பொருளும் உண்டு). வேத மந்திர த்ருஷ்டாக்கள் மனதாலும் இதயத்தாலும் இறைவனுக்காக ஏங்குகின்றனர். வேத மந்திரங்களே இறைவனின் காதலிகளாக அவனைச் சேருகின்றன. வேத இலக்கியம் தரும் ஒரு முக்கியமான சித்திரம் இது: காதலிகளின் தீண்டுதலாக வேத கவிதைகள், பிரார்த்தனைகள் சித்தரிக்கப்படுகின்றன. (ரிக் 1.62.11;1.82.5-6; 1.186.7; 3.52.3; 4.32.16; 1.9.4; 3.39.1). இந்த மரபுப்புலத்தின் பின்னணியிலேயே ஆண்டாளின் பாசுரங்களை பார்க்கவேண்டும். இருமை நிலையிலிருந்து இரண்டற்று இறையுடன் கலக்க இந்த நாயக-நாயகி பாவம் மிகவும் சிறப்பான பாதையாக உலகமெங்கிலும் மறைஞானிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூத-விவிலியத்தில் சாலமோன் மன்னனால் பாடப்படும் உன்னதப் பாட்டுக்களை இதற்கான ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். யூதத்தில் வெளிப்பட்ட இந்த நாயக-நாயகி பாவத்தை நிறுவனப்படுத்தி, கிறிஸ்தவம் கிறிஸ்தவ சபையையே ஏக இறைவனின் நாயகியாக்கியது. ”காம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு” என்னும் நிலையிலிருந்து ”திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல்” என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்ப்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும், அதன் அடுத்த கீழ்ப்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமான உறவாகவும் அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரதப் பண்பாட்டில் ஏற்படவே இல்லை. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான பராசர பட்டர் தமது சீடர்களை ஆண்டாள் பாசுரங்களை தினமும் படிக்கவும், அதுவும் முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் அதில் ஒரு பாசுரத்தையாவது படிக்கவும், அதுவும் முடியவில்லை என்றால் பாசுரத்தில் உள்ள உணர்ச்சிகளை முழுமையாக தன்னில் கொள்ளவும் வலியுறுத்தினார். இதில் இருக்கும் மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். ஆண்டாளின் பாசுரங்களைத் தத்துவார்த்த குறியீடாக மாற்றுவதற்கு அப்பால், ஆண்டாள் கோபிகைகளின் உணர்ச்சிகளைத் தனதாக மாற்றினாள். அதன் மூலம் இறையுடன் கலந்தாள். பராசர பட்டரும் அதையே சொல்லுகிறார் - “ஆண்டாளின் உணர்ச்சிகளை தமதாக மாற்றுவதன் மூலம் விஷ்ணுவுடன் இரண்டற கலந்திட முடியும்” என்று. இந்த உணர்ச்சிகள் ஆதாரமாக அனைத்து மானுடத்துக்கும் சொந்தமானவை. அதிலிருந்து அகம் இழந்து அகம் விரிவதே ஒரு யோக சாதனையாக (Sadhana) ஆகிறது. பின்னர் சூஃபி இலக்கியத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் காம-உணர்ச்சி பெரும் இருத்தலைத் தொட்டுணர ஒரு கருவியாக மாற்றப்படுவதைக் காணலாம். பின்னாட்களின் இந்திய சூஃபி இறைக்காதல் பாடல்களில் வேத இலக்கியத்தில் தீட்டப்பட்ட அக ஓவியங்கள் மீண்டும் எழுவதை காணலாம். ஒரு இலக்கிய-வரலாற்று விமர்சகர் இதனை பின்வருமாறு விளக்குகிறார்: "வேத ரிஷி தனது இறைவனைத் தனது பாடலில், மனைவியிடம் கணவன் சுகம் அடைவது போல சுகத்தை அடைய வேண்டுகிறார். இத்தகைய பாடல்களில் தீட்டப்படும் வெகு அந்தரங்கமான காதல் உணர்வு பின்னாட்களின் சூஃபி கவிதைகளை நினைவுப்படுத்துவதாக உள்ளது. சில செய்யுட்கள் இறைவனை தீண்டுவதாகவும் முத்தமிடுவதாகவும் சொல்கின்றன. ”என் காதலனின் தீராத தீண்டலில் நான் இன்பமுற்றேன் என” என கபீர் கூறுவதற்கு ஒப்பாக இது உள்ளது." மேற்கத்திய மரபில் இந்த உணர்வு மறைவாகவும் ஒடுக்கப்பட்டது என்று சொன்னேன். மிகக் கொடுமையாகவே ஒடுக்கப்பட்டது. சில சமயங்களில், அவ்வாறு அடக்கப்பட்ட உணர்வுகள் அலைகளாக சமுதாயங்களில் பெருக்கெடுத்த தருணங்களில், நிறுவன சமயம் குறுக்கிட்டு கூட்டம் கூட்டமாக மக்களை கொன்று குவிக்கவும் செய்தது. என்ற போதிலும், மிக அரிதாகத் தப்பிப் பிழைத்த ஒரு தருணமாக பெண்-ஆன்மிக உணர்வு 16 ஆம் நூற்றாண்டின் ஸ்பானிய தேச பெண் துறவியான தெரசா என்பவரிடம் மட்டுமே வெளிப்படுகிறது. அப்பட்டமாக பாலியல் குறியீடுகள் மூலமாக (The ecstacy of St. Teresa) ஆன்மிக உணர்வுகளையும், இறையுடன் இரண்டற கலந்த நிலையையும் காட்டும் இந்தப் பெண் துறவியின் பாடல்கள் கத்தோலிக்க சபையின் புனித விசாரணைகளுக்குத் தப்பித்தது அதிசயமென்றே சொல்ல வேண்டும். அராபிய இலக்கியத்திலும் இப்பெரும் மரபு உள்ளது. காவேரிக்கரையில் ஆண்டாளின் பாசுரங்களில் மட்டுமே தோய்ந்து அதன் இருதயகதியை உள்வாங்கிய ஒருவர், பாஸ்ரா பட்டணத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிமைப்பெண் மறைஞானியான ரபியாவின் வரிகளில் சூடிக்கொடுத்த கோதையைக் கட்டாயமாக தரிசிக்க முடியும். மதங்களைத் தாண்டி மானுட ஆன்மிகத்தை இவர்களின் கவிதைகளே உருவாக்குகின்றன. ஆனால் வேத இலக்கியமும், ஆண்டாளும், அவ்லானின் தெரசாவும், அரேபியாவின் ரபியாவும், யூதத்தின் உன்னதபாடல்களும் வெறும் ஃபோர்னோகிராபி அல்லது திறமையான கவித்துவமான ஃபோர்னோகிராபி எனலாமா? பருவத்தின் காம எழுச்சிக்கும் வயோதிகத்தின் காம ஏக்கத்துக்குமான வடிகால் எனலாமா? பாஸ்ரா பட்டணத்து ரபியாவின் பாடல்களில் எழும் வேட்கையை அராபிய எழுத்தாளன் எவனாவது ஃபோர்னோகிராஃபி என சொல்வானா? அல்லது "அந்த தரத்தில் ஃபோர்ன் எழுத இறைவன் எனக்கு அருள் தர வேண்டும்" என்று சொல்வானா? அப்படி ஒருவன் சொன்னால் அவனை இலக்கியவாதியாக பார்க்க வேண்டி இராது. மனநோயாளியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கும். ஆனால் நமது போலி-மதச்சார்பின்மையில் தோய்ந்த ஆரோக்கியமற்ற சூழலில், அத்தகைய மனப்பிறழ்வுகள் அறிவுஜீவி அரிதாரம் பூசிக்கொள்ளுவதுதான் வேதனையான அவலம். - அரவிந்தன், சென்னை...

1 comment:

  1. கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
    களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
    உடனே கையுடன் கைகோர்த்தாளா
    ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
    ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
    அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
    கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
    காதலாய் மாறலாம் எச்சரிக்கை
    ....

    உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
    உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
    அறுவடை கொள்முதல் என்றே காமம்
    அமைவது பொதுவே நலமாகக் கொள்
    கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
    கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
    உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
    யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
    முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
    ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
    காமமெனப்படும் பண்டைச் செயலில்
    காதல் கலவாது காத்துக்கொள்
    ....

    கலவி செய்கையில் காதில் பேசி
    கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
    வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
    குழந்தை வாயை முகர்ந்தது போலக்
    கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
    காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
    கூட நின்றுவன் உதவிட வேண்டும்
    ....

    வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
    வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
    ....

    இப்படிக் கணவன் வரவேண்டும் என
    ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
    வரந்தருவாள் என் வரலட்சுமியென
    கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
    ....

    தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
    முற்றும் துறந்து மங்கையரோடு
    அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
    ...

    மூத்த அக்காள் கணவனுக்கு
    முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
    அக்காளில்லா வேளையில் அவன்
    காளத்தி வேண்டும் என்றான்
    ...

    வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
    வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
    நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
    உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
    அரங்கநாதன் ஆள் எப்படி?
    பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
    வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
    அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
    இனிய கணவர் யார்க்குமுண்டோ?
    உனக்கேனுமது அமையப் பெற்றால்
    உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
    நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
    ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!

    ReplyDelete